`மனிதத்தன்மையற்ற செயல்'- கொரோனா சிகிச்சை செலவை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம்; கண்டித்த நீதிமன்றம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற பொற்கமலம் என்பவர், 2014-ம் ஆண்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக அவரது ஓய்வூதியத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதித்த அவர், தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக செலவான 2 லட்சத்து 62 ஆயிரத்து 596 ரூபாயை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திரும்ப வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படவில்லை எனவும், இணைப்பில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதை எதிர்த்து பொற்கமலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காததால்,  இன்சூரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படாத தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட நிலையில், 73 வயதான ஓய்வூதியதாரருக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் மனிதத்தன்மையற்றது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், தீவிர பாதிப்பு இல்லாதபோதும், இணைப்பு பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தாலும், மருத்துவ செலவுகளை கோருவதற்கு அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளதாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அரசு பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, மருத்துவ செலவுகளை வழங்கக் கோரி மீண்டும் விண்ணப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று தாமதமின்றி மருத்துவ செலவை வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், 73 வயது ஓய்வூதியதாரரை நீதிமன்றம் நாடச் செய்த நிறுவனம், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 25 ஆயிரம் ரூபாயை மூன்று வாரங்களில் வழங்க வேன்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



from India News https://ift.tt/nYVRbc7

No comments