செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்கி சோதனை செய்யும் விரைவு திட்டத்துக்கு மத்திய அரசு 174 கோடியே 64 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் திருச்சி உட்பட இந்தியா முழுவதும் 13 மாவட்டங்களைத் தேர்வு செய்து கடந்த  2018-ம் ஆண்டு மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் அரிசி வழங்கும் விதமாக, ரேஷன் கடைகளில் உள்ள பொது விநியோகத் திட்டம் வாயிலாகவும், பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் வாயிலாகவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

இதன்படி ரேஷன் கடைகள், மதிய உணவு திட்டம் உள்ளிட்டவை மூலம் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தடைவிதிக்கக் கோரி தமிழ் தேசிய பேரியக்கத்தின் மகளிர் ஆயத்தின் செயலாளர் கனிமொழி மணிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுவதாகவும், செறிவூட்டப்பட்ட உணவு ஒழுங்குமுறை சட்ட விதியின்படி, தலசீமியா, ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புசத்து கொண்ட செறிவூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும், எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், மக்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், இந்தியாவில் மிகப்பெரிய உடல் நலபாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுகத்திட்டமாக இது அமைந்திருப்பதாகபும் அச்சம் தெரிவித்துள்ளார். எனவே செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு வழங்குவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு நேற்றைய தினம் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், விரைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 மாவட்டங்களில், ஆந்திரா மாநிலத்திலுள்ள நர்மதா மாவட்டத்தை தவிர, வேறு எந்த மாவட்டத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இதையடுத்து, வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.



from India News https://ift.tt/PYBzTq5

No comments