Breaking News

I.N.D.I.A Vs NDA... இரு அணிகளிலும் சேராத 11 கட்சிகளால் யாருக்கு சாதகம்?!

எதிர்க்கட்சிகள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ அணியில் 26 கட்சிகளும், ஆளும் பா.ஜ.க தலைமையில் என்.டி.ஏ-வில் 38 கட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இரு அணிகளிலும் மொத்தம் 64 கட்சிகள் இருக்கின்றன. எதிர்க் கட்சிகளின் அணியில் பெரும்பாலும் பலம் வாய்ந்த கட்சிகளும், பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்.டி.ஏ-வில் பலம்வாய்ந்த கட்சி பா.ஜ.க மட்டும்தான். பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய கட்சி அ.தி.மு.க-தான். அதற்கடுத்து, சிறிய கட்சிகளும், உதிரி கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகளுமே இருக்கின்றன.

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

இந்த இரு அணிகளிலும் இடம்பெறாமல் பல கட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக, 11 பெரிய கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளுக்கு 91 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இவர்கள், இரு அணியிலும் இல்லாமல் ‘நியூட்ரல்’ நிலைப்பாட்டில் இருப்பதென்கிற முடிவுடன் இருக்கிறார்கள்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி ஆளும் கட்சிகளாக இருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் 63 மக்களவை எம்.பி-க்கள் இருக்கிறார்கள். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி, ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம்., சிரோமணி அகாலி தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆர்.எல்.பி., எஸ்.ஏ.டி (மான்) ஆகிய கட்சிகளும் தனித்தே இருக்கின்றன.

பிரதமர் மோடி - ஜெகன் மோகன் ரெட்டி

2019 மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் 22 இடங்களை வென்றது. பிஜு ஜனதா தளம் 2000-ம் ஆண்டிலிருந்து ஒடிசாவில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும், பிஜு ஜனதா தளமும் என்.டி.ஏ-வில் இடம்பெறவில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய ஆதரவைத் தொடர்ந்து அளித்துவருகின்றன. எதிர்க் கட்சிகளால் எதிர்க்கப்படும் மசோதாக்களை பா.ஜ.க அரசு கொண்டுவரும் போதெல்லாம், அந்த மசோதாக்களை நிறைவேற்ற இந்த இரு கட்சிகளும் உதவிபுரிகின்றன.

தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து அங்கு ஆட்சியில் இருக்கும் பாரத ராஷ்டிர சமிதியும், உ.பி-யில் ஒன்பது எம்.பி-க்களைக் கொண்டிருக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இரு அணிகளிலும் இல்லை. மாயாவதியின் கட்சி உ.பி-யில் நான்கு முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாக மாயாவதி அறிவித்துவிட்டார்.

நவீன் பட்நாயக்

பிரதமர் மோடியை அவ்வப்போது சந்தித்துவந்தாலும், ‘மாநில அரசுக்கு போதுமான ஆதரவை அளிக்கவில்லை’ என்று மத்திய அரசை விமர்சித்துவருகிறார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். மத்திய அரசின் திட்டங்களில் மாநிலத்துக்கு போதுமான ஒத்துழைப்பை பா.ஜ.க அரசு அளிக்கவில்லை என்ற விவகாரத்தை மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு தன் கட்சி எம்.பி-க்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“தன்னுடைய கட்சி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு தீண்டத்தகாத கட்சியாக நடத்தப்படுகிறது” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. தெலங்கானாவில் ஹைதராபாத்தை ஒட்டிய பகுதிகளில் இந்தக் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. உ.பி., பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்தக் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.

ஒவைசி

நவீன் பட்நாயக்கைப் பொறுத்தளவில், தனியாகப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பார். மத்தியில் எந்தக் கட்சிக்கு ஆட்சிக்கு வருகிறது என்பதைப் பொறுத்து, தேர்தலுக்குப் பிறகு தனது ஆதரவு நிலைப்பாட்டை அவர் எடுப்பார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி ஒன்று ஏற்பட்டால், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸை பா.ஜ.க-வுக்கு எதிராகத் திரும்பும். பா.ஜ.க எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் பாரத ராஷ்டிர சமிதி, ‘இந்தியா’ அணியிலும் சேர வாய்ப்பு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்சிகளால் இரு அணிகளுக்குமே பாதிப்பு என்றாலும், தேர்தலுக்குப் பிறகு இந்த கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகின்றன என்பதுதான் முக்கியம்.!



from India News https://ift.tt/oLChcNz

No comments