Breaking News

ஓராண்டாக திட்டம் தீட்டி வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; அடையாளத்தை மாற்றி தலைமறைவாக வாழ்ந்தவர் கைது!

மும்பை தானே மான்பாடாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கரன்சி சேமிப்பு கிடங்கு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் கடந்த ஜூலை 12-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். வங்கியில் லாக்கர் சாவிகள் பொறுப்பாளராகப் பணியாற்றிய அல்தாப் ஷேக் (43) இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அல்தாப் சகோதரி நிலோபர் வீட்டில் சோதனை நடத்தி வங்கியில் திருடப்பட்ட பணத்தின் குறிப்பிட்ட பகுதி மீட்கப்பட்டது. இதையடுத்து நிலோபர், கொள்ளையில் ஈடுபட ஷேக்குக்கு உதவிய நண்பர்கள் என மொத்தம் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் ஷேக் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தான். அவனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி ஷேக்கின் நடமாட்டத்தை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அவன் புனேவிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

அவன் புனேவில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு பர்தா அணிந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். போலீஸார் அவனைக் கைதுசெய்து மும்பை அழைத்து வந்தனர். அவனிடமிருந்து ரூ.9 கோடி வங்கிப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கூறுகையில், ``மும்ப்ராவில் வசிக்கும் அல்தாப் ஷேக் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் லாக்கர் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார். லாக்கர் சாவிகளும் அவரிடமே இருந்தன. வங்கியில் பணியாற்றியபோது கடந்த ஓராண்டாக அங்கிருக்கும் பணத்தை திருட ஷேக் திட்டம் தீட்டினான். லாக்கர் இருந்த அறையிலிருந்து எப்படி பணத்தை எடுத்துச் செல்வது என்பது குறித்தும், திருடுவதற்கு தேவையான உபகரணங்களை சேகரிக்கவும் ஓராண்டை செலவிட்டான். பின்னர் வங்கியிலிருந்த அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு சிசிடிவி கேமராவை வேலை செய்யவிடாமல் செய்துவிட்டு லாக்கரை திறந்து உள்ளே இருந்து பணத்தை எடுத்து ஏ.சி-யை கழற்றிவிட்டு அந்த துளை வழியாக பணத்தை வெளியில் அனுப்பியிருக்கிறான். வெளியில் அவன் நண்பர்கள் நின்று பணத்தை வாங்கியிருக்கின்றனர். கொள்ளைப் போன 12.20 கோடியில் ரூ.9 கோடி மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது."



from தேசிய செய்திகள் https://ift.tt/0goUsz1

No comments