Breaking News

`ஏரிகளை காக்கத்தவறிய கர்நாடக அரசு; ரூ.500 கோடி அபராதம் செலுத்ததான் வேண்டும்' - பசுமை தீர்ப்பாயம்

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, ‘ஐ.டி ஹப்’ ஆக உருவெடுத்து அசுர வளர்ச்சியைக்கண்டு இன்று நாட்டின், ‘சிலிக்கான் வேலி’ என்றும், ‘எலக்ட்ரானிக்’ சிட்டி எனவும் அழைக்கப்படுகிறது. முன்பு பெங்களூரில், 850க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நகரம் வளர வளர, கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து பல ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாக காட்சியளிக்கின்றன. அரசும் சில ஏரிகளை மூடி, பஸ் ஸ்டாண்டு மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டியுள்ளன.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, பெல்லந்துார் என, நகரின் பல இடங்களில் ஏரிகளுக்கு அருகே, அதிக நச்சுத்தன்மையுள்ள கழிவுநீரை வெளியிடும் வகையிலான ‘சிகப்பு’ பிரிவு கம்பெனிகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல், பெல்லந்துார், சந்தபுரா, வர்துார் உள்பட நகர் முழுதும் உள்ள ஏரிகளில் அப்படியே கலக்கப்படுவதால் நீர் கடுமையாக மாசடைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது.

கழிவுநீரால் நுரையுடன் செல்லும் ஏரி நீர்.

ரூ.500 கோடி அபராதம்!

இந்த நிலையில், 2017-ல் சந்தபுரா ஏரி கடுமையாக மாசடைந்துள்ளதாக, தேசிய பசுமை தீர்ப்பாயைத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏரியை சீரமைத்து, பாதுகாப்பதோடு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கர்நாடக அரசுக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும் கர்நாடக அரசு ஏரியை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகவும், காலக்கெடுவுக்குள் ஏரியை காக்க தவறியதற்காகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு மாதங்களுக்கு முன் கர்நாடக அரசுக்கு, 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. நாடு முழுவதிலும் இந்தத்தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து கடந்த வாரம் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டுள்ள ஏரி.

கடந்த, 3-ம் தேதி மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் நீதிபதிகள், ‘‘ஏரிகளை பாதுகாப்பதில் கர்நாடக அரசு தோல்வியடைந்து உள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் அமல்படுத்தாமல், மாநில அரசு பயமின்றி அலட்சியமாக செயல்படுகிறது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராத தொகையை விரைவில் செலுத்த வேண்டும்,’’ என, காட்டமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதிகள்.

500 கோடி ரூபாய் அபராதம், கர்நாடக அரசின் மனு தள்ளுபடி என, ஏரிகளின் பாதுகாப்பை வலியுறுத்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த இரண்டு நிலைப்பாட்டையும் சூழல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3y9hQZc

No comments