ஓய்வெடுக்காமல் இயக்கிய டிரைவர்; விபத்தில் பறிபோன 9 உயிர்கள்! - பாலக்காடு சோகம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வெட்டிக்கல் பகுதியில் மார் பசேலியஸ் வித்யா நிகேதன் மேனிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. காலாண்டு விடுமுறையை முன்னிட்டு அங்கு படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவ மாணவியர் ஊட்டிக்குச் சுற்றுலா செல்ல தீர்மானித்தனர். அதன்படி நேற்று இரவு 7 மணி அளவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் என 47 பேர் தனியார் டூரிஸ்ட் பஸ்ஸில் சுற்றுலா புறப்பட்டுச் சென்றனர். டூரிஸ்ட் பஸ் திருச்சூர் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. பாலக்காடு வடக்கஞ்சேரி பகுதியில் ஒரு காரை முந்திச்செல்ல முயன்றபோது கொட்டாரக்கரையிலிருந்து கோவை சென்றுகொண்டிருந்த அரசு பஸ்ஸின் பின்புறம் மாணவர்கள் சென்ற டூரிஸ்ட் பஸ் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் டூரிஸ்ட் பஸ் தலைகீழாக உருண்டு சதுப்பு நிலத்தில் விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் மீட்புப்பணி தாமதமானது. வாகன ஓட்டிகளும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 9 பேர் மரணமடைந்தனர். பலருக்கு கை, கால்கள் துண்டானது. சதுப்பு நிலத்தில் உருண்டு விழுந்த டூரிஸ்ட் பஸ் கிரேன் மூலம் மீட்கபட்டது.

மார் பசேலியஸ் வித்யா நிகேதன் பள்ளி ஆசிரியர் விஷ்ணு, மாணவர்கள் எல்னா ஜோஸ், தியா ராஜேஷ், அஞ்சனா அஜித், கிறிஸ் விண்டர்போர்ன் தாமஸ், இம்மானுவேல் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கேரள அரசுப் பேருந்தில் பயணித்த தீபு, அனூப், ரோஹிதா ஆகியோரும் இறந்தனர். இதில் படுகாயமடைந்த 38 பேர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையே டூரிஸ்ட் பஸ் டிரைவர் ஜோமோன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு தலைமறைவானார். வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற டிரைவர் ஜோமோனை போலீஸார் கைதுசெய்தனர். நேற்று மாலை 5 மணிக்கு மாணவர்கள் சுற்றுலாவுக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், டூரிஸ்ட் பஸ் 7 மணிக்குத்தான் வந்திருக்கிறது. அபோதுதான் அவர் வேளாங்கண்ணியிலிருந்து பயணிகளை அழைத்து வந்ததாகவும்... அதன் பிறகு ஓய்வு எடுக்காமல் உடனே ஊட்டிக்கு டூர் கிளம்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த விபத்து குறித்து கேரள ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்திருக்கிறது. இது பற்றி நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறுகையில், ``இந்தச் செய்தியை இத்துடன் விட்டுவிடக்கூடாது. இதற்கு மாற்றுவழி கண்டுபிடித்தே ஆக வேண்டும். வாகனஓட்டிகள் இடது பக்கம் செல்லாமல், வலது பக்கம் செல்லப் பார்க்கிறார்கள். பல பஸ்களில் எமர்ஜென்சி பட்டன் இல்லை. பல டிரைவர்கள் போதை மருந்து பயன்படுத்துகிறார்கள். எந்த விபத்திலிருந்தும் எளிதில் தப்பித்துவிடலாம் என டிரைவர்கள் நினைக்கிறார்கள். சீட் பெல்ட் அணிவதில்லை. ஏர் பேக் செயல்படுவது இல்லை. விபத்து காரணமாக இப்போது அதுபற்றி யோசிக்கிறோம்" என்றார். மேலும் போக்குவரத்து கமிஷனர், சாலைப் பாதுகாப்பு கமிஷனர் ஆகியோர் நாளை கோர்டில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/HAUa714
Post Comment
No comments